புதிய தொழில்நுட்பத்தில் 'டைட்டானிக்' படம் மீண்டும் ரிலீஸ்
புதிய தொழில்நுட்பத்தில் ‘டைட்டானிக்’ படம் மீண்டும் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் திரையிட இருப்பதாக படக்குழவினர் அறிவித்து உள்ளனர். லியனார்டோ டிகாப்பிரியோ, கேட் வின்ஸ்லெட் நடித்து உலக அளவில் புகழ் பெற்ற ஹாலிவுட் படம், 'டைட்டானிக்'.
'ஆர்எம்எஸ் டைட்டானிக்' என்ற பயணிகள் சொகுசு கப்பல் 1912-ல் தனது முதல் பயணத்தை வட அயர்லாந்தில் உள்ள பெல்பாஸ்ட் நகரில் இருந்து தொடங்கியபோது வட அட்லாண்ட்டிக் பெருங்கடலில் பனிப்பாறையுடன் மோதி விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படத்தை ஜேம்ஸ் கேமருன் இயக்கி இருந்தார். 1997-ல் திரைக்கு வந்த 'டைட்டானிக் படம் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றது.
இந்த படம் உலகில் அதிகம் வசூலித்த படங்கள் பட்டியலில் 'அவெஞ்சர்: எண்ட்கேம்', 'அவதார்' படங்களுக்கு அடுத்து 3-வது இடத்தில் இருக்கிறது. 11 ஆஸ்கார் விருதுகளையும் பெற்றது. இன்றளவும் டைட்டானிக் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் டைட்டானிக் படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் படத்தை 3டி, 4கே, எச்.டி.ஆர் உள்ளிட்ட உயரிய நவீன தொழில்நுட்பத்தில் புதுப்பித்து அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் உலகம் முழுவதும் மீண்டும் திரையிட இருப்பதாக படக்குழவினர் அறிவித்து உள்ளனர். இது டைட்டானிக் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
0 Comments